ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் நிறுவனத்தின் மருந்து உற்பத்தி ஆலையில் ஆய்வு மேற்கொண்ட அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், இரு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.
பைடிபீமாவரத்தில் உள்ள நிறுவனத்தின் எஃப்டிஓ-11 உற்பத்திப் பிரிவில் அக்டோபர் 5 முதல் 7 வரை முன் அனுமதி ஆய்வு நடைபெற்றதாக, பங்குச்சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆய்வின்போது ஒழுங்குமுறைத் தரங்களை மீறக்கூடிய சூழல்கள் கண்டறியப்பட்டால், அவற்றைச் சுட்டிக்காட்டும் படிவம் 483 வழங்கப்படும். இந்த ஆய்வின் முடிவில் இரு குறிப்புகளுடன் அந்தப் படிவம் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
சுட்டிக்காட்டப்பட்டுள்ள இரு குறைபாடுகளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தீர்வு காணப்படும் என்று டாக்டர் ரெட்டீஸ் தெரிவித்துள்ளது. ஆய்வு முடிவுகள் மற்றும் அவற்றுக்கான நடவடிக்கை குறித்த தகவல்களை நிறுவனம் தனது பங்குச்சந்தை அறிக்கையில் வெளியிட்டுள்ளது.